search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம் மீனவர்கள்"

    • அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர்.
    • மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மீன்பிடிக்க செல்கிறார்கள். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் அச்சத்தில் தவித்து வருகிறார்கள்.

    இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை படகுகளுடன் சிறைப்பிடித்து செல்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசுவதும் காலங்காலமாய தொடர்கிறது. இதனை தடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இயற்கை சீற்றம் காரணமாகவும், மீன்பாடு அதிகமாக கிடைக்காததாலும் செலவுகளை மிச்சப்படுத்த குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 70 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    இதில் கச்சத்தீவு-நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான மீனவர்களை மிரட்டும் வகையில், சிங்கள கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதனால் அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர். இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறிய கடற்படை வீரர்கள் கடலில் விரித்திருந்த மீன் பிடி வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.

    பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு இன்று கரை சேர்ந்தனர். ஏற்கனவே மீன்பாடு மிகவும் குறைந்த நிலையில் ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு சென்றால், சிங்கள கடற்படையினர் அட்டூழியத்தால் தினம் தினம் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று மீனவர்கள் கண்ணீருடன் கூறினர்.

    ஆனால் இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் போலீஸ் நிலையத்திலோ, மீன்துறை அதிகாரிகளிடமோ புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    • ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர்.
    • மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத் தின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும், சிங்கள கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    சில வாரங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், படகுகளை இலங்கை அரசு அந்த நாட்டுடமையாக்கி விடுகிறது. இதனால் படகுகளை பறிகொடுக்கும் மீனவர்கள் வேறு வழியின்றி மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

    இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் 5 ஆயி ரம் மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து பாதிப்புக்குள்ளாகினர். மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

    இதனைதொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இலங்கை கடற்படையின் அச்சமின்றி மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இன்று முதல் அடுத்த சில நாட்கள் வரை ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள தென்கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.

    மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 2-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளனர். இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ராமேசுவரத்தில் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை மாறுபாடு காரணமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தரவில்லை என கூறப்படுகிறது.
    • கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் வாரத்தில் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

    ஒவ்வொரு முறையும் கடலுக்கு சென்று வரும்போது விலை உயர்ந்த இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட பலவகை ரக மீன்கள் கிடைக்கும். டன் கணக்கில் பிடிக்கப்படும் மீன்களை ஏற்றுமதி நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து அதனை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களுக்கு போதிய விலையை தர வில்லை என கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். கடலுக்கு சென்று வந்த செலவுக்குகூட போதவில்லை. எனவே விலையை உயர்த்தி தரக்கோரி மீனவர்கள் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் நஷ்டம் ஏற்படுவதாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (2-ந் தேதி) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை ராமேசுவரத்தில் வேலை நிறுத்தம் தொடங்கியது. ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார கடற்கரை பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வேலைநிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது.

    கேரளாவில் தற்போது இறால், காரல், சூடை போன்ற மீன் வரத்துகள் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் அங்கு குறைந்த அளவில் மீன்களை கொள்முதல் செய்கிறது. ராமேசுவரத்தில் மீன்களை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ காரல் மீன் ரூ.40-க்கு வாங்கிய வியாபாரிகள் தற்போது அதனை ரூ.20-க்கு கேட்கின்றனர். சூடை மீனும் ரூ.20 ஆக குறைந்துள்ளது.

    சங்காயம் வகை மீன்கள் ரூ.23-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.17-க்கு கேட்கப்படுகிறது. இதுபோன்று பல்வேறு ரக மீன்கள் குறைந்த விலைக்கு கேட்கப்படுவதால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடலுக்கு சென்றும் போதிய வருமானம் இல்லை. இதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

    விசைப்படகு மீனவர்கள் மட்டும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். நாட்டு படகு மீனவர்கள் இன்று வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.

    • ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
    • கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த 3 நாட்களாக உள்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

    இதனால் ராமேசுவரம் துறைமுகம், பாம்பனில் 5 ஆயிரம் படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 4-ம் நாளான இன்றும் ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசி வருகிறது.

    கடலில் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன் போன்ற பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின. இதன் காரணமாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    4-வது நாளாக தொடரும் இந்த தடையால் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடந்த 4 நாட்களில் ரூ.7 கோடி அளவில் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியிலும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் சில நேரங்களில் கடல் உள் வாங்கியதால் படகுகள் தரைதட்டி நின்றது.

    • நேற்று முன்தினம் 9 மீனவர்களை கைது செய்தது
    • இன்று 3 படகுகளில் சென்றவர்களை கைது செய்துள்ளது

    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் சென்ற 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

    நேற்று முன்தினம் 9 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 21 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு வாரத்திற்குள் இரண்டு முறை இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது.

    • தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த செயலை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

    மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று தினமும் சுழற்சி முறையில் மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். கடந்த 16-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    தங்கச்சிமடம் ராஜா நகரை சேர்ந்த அபிலதாப் என்பவரின் விசைப்படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவர்களது படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு படகிற்குள் தண்ணீர் வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த படகிலிருந்த 5 மீனவர்களும், ராமேசுவரத்தை சேர்ந்த மற்றொரு படகில் ஏறி கரைக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே நடுக்கடலில் நின்ற அந்த படகை இலங்கை கடற்படையினர் பார்த்தனர்.

    அவர்கள் அந்த படகில் ஏறி சோதனை செய்தனர். பின்பு சந்தேகப்படகு என்று கருதிய இலங்கை கடற்படையினர், அதனை பறிமுதல் செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று 558 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்பட 9 பேர் சென்றார்கள்.

    அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த போது, அவர்களுடைய படகு பழுதாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 9 மீனவர்களும் படகுடன் நடுக்கடலில் இருந்துள்ளனர். பழுதான அவர்களது படகு காற்று காரணமாக நெடுந்தீவு பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

    அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களின் படகை பார்த்தனர். இதையடுத்து படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த ராமேசுவரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். படகு பழுதானதால் அங்கு வந்துவிட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    இருந்த போதிலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகின் உரிமையாளர் அந்தோணி, சேசு ராஜா, ரூபன், முத்து, ஜான்சன், லெனின், பிரகதீஷ், ஜேக்கப், மற்றொரு அந்தோணி ஆகிய 9 பேரையும் கைது செய்தனர். பின்பு மேல் விசாரணைக்காக அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

    மேலும் அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு விசாரணைக்கு பின்னரே ராமேசுவரம் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா? என்பது தெரியவரும். இதனால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

    • இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.
    • ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது வழக்கம்போல் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியான இங்கு மீன்பிடிக்க அனுமதி இல்லை. எனவே இங்கிருந்து புறப்பட்டு செல்லுங்கள் என எச்சரித்தனர். சில வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி தாக்கி விரட்டியடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து இந்த பகுதியில் மீன் பிடித்தால் விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்படுவீர்கள் என இலங்கை கடற்படை எச்சரித்தது.

    இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே அவசர அவசரமாக கரைக்கு புறப்பட்டனர். இவ்வாறு அவசர கதியில் திரும்பும்போது மீனவர்களின் படகுகள் ஒன்றொடு ஒன்று மோதி சேதமடைந்தன.

    இலங்கை கடற்படையின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்கு திரும்பினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதன் காரணமாக எங்களுக்கு ஒவ்வொரு படகுகளுக்கும் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

    இந்த போக்கு நீடித்தால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    அதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்று முடிவ டைந்தது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் விடுவிக்கப்பட்ட 15 பேரும் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, படகின் உரிமையாளர் 6 மாதத்திற்குள் கோர்ட்டில் ஆஜராகுமாறு தெரிவித்தார்.

    விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

    • விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.
    • விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

    இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோணி, கிருஷ்ணன், தங்கப்பாண்டி, அஜித், மடுகுபிச்சை ஆகிய 6 மீனவர்கள் தூதர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் 6 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து மன்னார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், இலங்கை மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 6 பேரும் இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மன்னார் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்களை விடுதலை செய்து மன்னார் கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் மீண்டும் எல்லை தாண்டி வந்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.

    விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரும் ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தினமும் 1000 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் மீன்கள் ராமேசுவரம் மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடல் காற்று பலமாக வீசி வருகிறது. கடந்த 3 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலிலுக்கு செல்லாமல் முடங்கி உள்ளனர்.

    இதன் காரணமாக ஒரு நாளைக்கு ரூ. 1.50 கோடி வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மொத்தம் ரூ. 3 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் விபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்பதால் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

    இருந்தபோதிலும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். தினமும் 1000 நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க சென்று வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் மீன்கள் ராமேசுவரம் மீன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் மீன்வியாபாரிகளின் வருகையும் குறைந்துள்ளது.

    ராமேசுவரம் பாம்பன் பாலம் வழியாக செல்லும் ரெயில் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். கடந்த 2 நாட்களாக கடல் காற்று பலமாக வீசுவதால் பாம்பன் பாலம் வழியாக செல்லும் ரெயில் 5 கி.மீ. வேகத்தில் தான் இயக்கப்பட்டது. ரெயில் வேகமாக செல்லாமல் ஊர்ந்து சென்றது. இதனால் பயணிகள் கடலின் அழகை பார்த்து ரசித்தனர்.

    ராமேசுவரம் பாம்பன் பகுதியில் கடற்கரை ஓரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. கடல் காற்று காரணமாக இந்த தென்னை மரங்கள் தலைவிரித்து ஆடி வருகின்றன. இதனால் மரங்கள் முறிந்து சேதமாகி விழும் என்று அதன் உரிமையாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

    கடல் காற்று குறைந்தால் தான் தடையின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியும் என்பதால் மீனவர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் மீனவர்கள் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
    • ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1200 விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரம், பாம்பன் உள்பட தமிழக கடலோரப் பகுதியில் மீன் இனப்பெருக்கத்திற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதித்திருந்தது.

    இதனையொட்டி கடந்த 61 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை கடல் கரையோரத்தில் நிறுத்தி பாதுகாத்து வந்தனர். மேலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை சீரமைப்பது, மீன்பிடி சாதனங்களை புதுப்பிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் மீனவர்கள் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

    ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1200 விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீனவர்கள் 61 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் சென்றனர்.

    மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கூறும்போது, நாங்கள் 61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்கிறோம். மீன் இன பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் எங்களுக்கு வருமானம் கிடைக்காது. தற்போது மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் எங்களுக்கு அதிகளவில் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    ×